Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld News6 நாட்களாக தொடரும் யுக்ரைன் - ரஷ்ய யுத்தம்

6 நாட்களாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய யுத்தம்

யுக்ரைன் – ரஷ்ய யுத்தம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்த நிலையில் யுக்ரைனிலிருந்து 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.

தாக்குதல்களில் 14 சிறார்கள் உள்ளிட்ட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

தற்போது யுக்ரைன் தலைநகர் கியுவ் அருகில் 40 மைல் நீளத்துக்கு ரஷ்யாவின் இராணுவ படை குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்மதி படங்கள் இதனை உறுதி செய்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யா யுக்ரைனில் நேற்று சூழலில் உள்ள பிராணவாயுவைத் திரட்டி பாரிய வெடிப்பு அலையை ஏற்படுத்தும் வாயு குண்டு ஒன்றைப் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், யுக்ரைனில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு விரோதமான செயல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ரஷ்யாவுக்கு எதிராகச் சண்டையிட விரும்புகின்ற வெளிநாட்டவர்களுக்கு யுக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கனவே சிறைகளில் உள்ள ரஷ்யாவுக்கு எதிராகப் போராடும் விருப்பம் உள்ள கைதிகளை விடுவிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

யுக்ரைனில் படைபலம் குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

இதேவேளைப் பறப்பதற்குத் தடுக்கப்பட்ட வான் பிரதேசத்தை அறிவிக்குமாறு யுக்ரைன் ஜனாதிபதி விடுத்திருந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், அமெரிக்கா நேரடியாக ரஷ்யாவுடன் யுத்தம் செய்வதாக அமையும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, வோல்ட் டிஸ்னி மற்றும் வொர்னர் பிரதர்ஸ் போன்ற அமெரிக்காவின் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது திரைப்படங்களை ரஷ்யாவில் திரையிடுவதில்லை என அறிவித்துள்ளன.

இதேவேளை, யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க அளவு எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்த சமயம், யுக்ரைன் மீதான குண்டுத் தாக்குதல்களை அதிகப்படுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி தமது படைகளுக்கு உத்தரவிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியம் போன்றன ரஷ்யாவின் மத்திய வங்கிக்குப் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

கனடாவும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை என அறிவித்துள்ளது.

மேலும் யுக்ரைனுக்குக் கனடா தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யா பெலாரஸில் உள்ள படையினரைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

 319 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular