சட்ட திட்டங்களை மீறி, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர், விடுவிக்கப்படாமல்  சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள வாகனங்களை விடுவித்து, அதனூடாக இலாபம் ஈட்டுவது தொடர்பில் அந்த திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

அவ்வாறான  வாகனங்களை,  தண்டப்பணம் மற்றும்  வரி ஆகியவற்றை அறவிட்ட பின்னர் விடுவிப்பதனூடாக வருமானம் ஈட்டுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால்  ஜீ.வி. ரவிப் பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி,  சுங்கத் திணைக்களத்தின் பொறுப்பில், சட்ட திட்டங்களை மீறி இறக்குமதி செய்யப்பட்ட  262 வாகனங்கள் உள்ளதாகவும், அவற்றை இம்மாதம் நிறைவுக்குள்  தண்டப்பணம் மற்றும் வரி ஆகியவற்றை அறவிட்டுக்கொண்ட பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்டத்தை முன் வைத்து, இந்த வாகனங்களை விடுவிப்பதன் ஊடாக அரசாங்கத்துக்கு 400 கோடி ரூபா மேலதிக வருமானத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில்  பிரேரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.