அஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சுமார் 24 வருடங்களுக்கு பிறகு, கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இன்று பாகிஸ்தான் சென்றடைந்தது.
அவர்கள் அங்கு தங்கியிருக்கும் ஆறு வாரங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து, பாகிஸ்தான் செல்வதில் பல கிரிக்கெட் அணிகள் அச்சம் கொண்டிருந்தன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லாஹூர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுதாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்திலிருந்து அவுஸ்திரேலியா விலகியது.
அவுஸ்திரேலிய அணி இறுதியாக 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடியது. அதன்போது, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.
அத்துடன், மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானை வெள்ளையடிப்பு செய்தது.
இந்நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி மூன்று டெஸ்ட் , மூன்று ஒரு நாள் மற்றும் ஓர் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் மார்ச் 4 முதல் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் அணி, தாம் ஏற்பாடு செய்யும்போட்டிகளை வெளிநாடுகளில், குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் விளையாட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியிருந்தது.
எவ்வாறாயினும், கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூஸிலாந்து அணி, பாதுகாப்பு விடயங்களை காரணம் காட்டி இறுதி தருணத்தில் தொடரை ரத்து செய்து பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்துக்கு சென்று நாடு திரும்பியது.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியும் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருந்தது. இந்தநிலையில், தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி தங்கியுள்ள இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளித்துவருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
178 total views, 1 views today