நாட்டில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியின் டோஸினை வழங்க சுகாதார அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, அதே சமயம் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட உடல் நல சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதன்படி இதுவரை சுமார் 30,000 சிறுவர்களுக்கு கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை முதல் 12-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் இடங்களிலேயே ஆசிரியர்களும் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

சுகாதார அமைச்சில் இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.