சன்டியாகோ பேர்னபோ விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற எஸ்பானியோல் கழகத்துக்கு எதிரான போட்டியில் 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றதன் மூலம் லா லிகா சம்பியன் பட்டத்தை ரியல் மெட்றிட் கழகம் உறுதிசெய்துகொண்டது.
லா லிகா கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இன்னும் 4 கட்டப் போட்டிகள் மீதம் இருக்கின்றபோதிலும் எஸ்பானியோல் கழகத்தை வெற்றிகொண்டதன் மூலம் அதிகப்பட்ச 81 புள்ளிகளைப் பெற்று ரியல் மெட்றிட் கழகம் சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டது.
அணிகள் நிலையில் பார்சிலோனா கழகம் 34 போட்டிகளில் 66 புள்ளிகளுடன் 66 (ரியல் மெட்றிடைவிட 15 புள்ளிகள் வித்தியாசம்) 2ஆம் இடத்திலும் செவில் கழகம் 64 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.
இந்த சம்பியன் பட்டத்தின் மூலம், ரியல் மெட்றிட் கழக பயிற்றுநரான கார்லோ அன்சிலோட்டி, ஐரோப்பாவில் 5 பிரதான லீக் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை சூட்டிக்கொண்ட முதலாவது பயிற்றுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
இங்கிலாந்து, ஸ்பெய்ன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பிரதான கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பயினாகிய அணிகளுக்கு கார்லோ அன்சிலோட்டி பயிற்றுநராக இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியின் முதலாவது பகுதியில் ரொட்றிகோ (33 நி., 43 நி.) 2 கோல்களைப் போட்டு ரியல் மெட்றிடை முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின் பின்னர் மார்க்கோ அசென்சோ (55 நி.), கரிம் பென்ஸிமா (81 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டு றியல் மெட்றிட் கழகத்தை வெற்றிபெறச் செய்தனர்.
ரியல் மெட்றிட் கழகத்தில் 24ஆவது சம்பியன் பட்டத்தை 33 வயதான மார்சிலோ வென்றெடுத்துள்ளார்.
126 வருட ரியல் மெட்றிட் கழக வரலாற்றில் அதிகத் தடவைகள் சம்பியன் பட்டத்தை சூடிய தனி ஒரு வீரர் என்ற சாதனையை மார்சிலோ தனதாக்கிக்கொண்டார். இவர் கடந்த 16 வருடங்களாக ரியல் மெட்றிட் கழகத்துக்காக விளையாடி வந்ததுடன் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என கருதப்படுகிறது.
இதற்கு முன்னர் பிரான்சிஸ்கோ ‘பெக்கோ’ ஜென்டோ என்பவர் 23 தடவைகள் ரியல் மெட்றிட் கழகத்தில் சம்பியன் பட்டங்களை சூடியிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்பானிய சுப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ கழகத்தை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் ரியல் மெட்றிட் கழகம் வெற்றிபெற்று சம்பியனானபோது ஜென்டோவின் சாதனையை மார்சிலோ சமப்படுத்தியிருந்தார்.
அதற்கு 2 தினங்களுக்குப் பின்னர் (2022 ஜனவரி 18ஆம் திகதி) ஜென்டோ காலமானார்.
204 total views, 1 views today