Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsறம்புக்கனை சம்பவம்: முழு விபரம்

றம்புக்கனை சம்பவம்: முழு விபரம்

றம்புக்கனை பிரதேசத்தில் இன்று காலை முதல் இடம்பெற்ற மோதல்களில் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் எட்டு காவல்துறை உத்தியோகத்தர்களும்உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டின் பின்னணி

எரிபொருள் விலைக்கு எதிராக ரம்புக்கனை தொடருந்து கடவையால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றபோது போராட்டக்காரர்களும் காவல்துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தொடருந்து கடவையால் சென்ற எரிபொருள் தாங்கி ஊர்தியை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு தீ வைக்க முயன்றதுடன் முச்சக்கரவண்டி ஒன்றுக்கு தீவைத்துடன், அந்த இடத்திலிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டனர்.
அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலகத் தடுப்புப் காவல்துறையினர் மீது கற்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிலைமை எல்லை கடந்ததால் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

துப்பாக்கி பிரயோகம் ஏன் நடத்தப்பட்டது?

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ள போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தியிருக்கவில்லை என்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

இதேவேளை, றம்புக்கனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு மூவர் கொண்ட குழு
றம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக, மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபையும்  கவலையை வெளியிட்டுள்ளதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது ட்விட்டர் செய்தியில், றம்புக்கனை சம்பவத்தின் முடிவு மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான வன்முறைகளையும் அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு கோரியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய அலுவலகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

 280 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency