ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் கோருகிறார்கள். ஊழல்மோசடியாளர்களுடன் ஒன்றினைந்து ஆட்சியமைத்தால் சர்வதேசத்தின் உதவியையும் இனி பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை தோற்றம் பெறும். நெருக்கடிக்கு நிலைமைக்கு தீர்வு காணவே இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் [10.04.2022]இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கும்,மக்களின் கருத்துக்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை வழங்காததன் விளைவு முழு நாட்டிற்கும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்துள்ளார்கள்.

ராஜபக்ஷர்கள் இல்லாத இடைக்கால அரசாங்கத்தை மக்கள் கோருகிறார்கள். ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றினைந்து தற்போதைய பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. நாட்டு மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

நாட்டு மக்களின் கருத்திற்கமைய ஜனாதிபதி பதவி விலகினால் பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும். தற்போதைய பாராளுமன்றில் செயற்பாடுகளுக்கு அமைய விரைவாக இடைக்கால ஜனாதிபதி நியமனம் இடம்பெறும் என்பது சாத்தியமற்றது.

புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு,முஸ்லித் காங்கிரஷ்,உட்பட சகோதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.