Saturday, July 2, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsரவூப் ஹக்கீமுக்கு ஆப்பு வைத்த ஹாபிஸ் நசீர்

ரவூப் ஹக்கீமுக்கு ஆப்பு வைத்த ஹாபிஸ் நசீர்

முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளுமன்றில் 5 உறுப்பினர்கள் உள்ளபோதும், அந்த கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டுமே எதிர்கட்சி சார்பாக செயல்பட்டு வருகிறார். ஏனைய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்தனர்.

கடந்த காலத்தில் அரசாங்கம் கொண்டு வந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மற்றும் வரவு – செலவுத் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடாளுமன்றில் வாக்களிக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்து. ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் தவிர ஏனைய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

இதனையடுத்து தமது 4 உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது. அந்த உறுப்பினர்கள் கட்சி அளவில் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

கட்சியின் தீர்மானங்களை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்; இனி கட்சியின் தீர்மானத்தின் படி செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அரசாங்கத்துக்கு தமது வெளிப்படையான ஆதரவை வழங்குவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் பதவியேற்றுள்ளார்.

இதனையடுத்து, “ஹாபிஸ் நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிபிசி தமிழுக்கு பேசிய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார்.

“பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மிலிந்த மொரகொடவுடன் (தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார்” என்றும் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் கூறியதாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18ஆம் தேதி பசில் ராஜபக்ஷ வந்து ஹக்கீமுடன் பேசியதாகவும், அப்போது – தான் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்ததாகவும் கூறிய ஹாபிஸ் நசீர் அஹமட்; “அதன்போது முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்” என்று, பசீல் ராஜபக்ஷவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவுடனான அந்த சந்திப்பு பகல் 12.16 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரைக்கும் நடந்ததாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் நான் உரையாற்றிய போது, எமது கட்சித் தலைவர் மனச்சாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு எங்களுக்குக் கூறியுள்ளார் என கூறினேன். அதனை தலைவர் ஹக்கீம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் கூறியது பொய் என்றால், அவர் என்னை இடைமறித்து, ‘நீங்கள் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. காரணம், அவரின் உத்தரவுக்கு அமைவாகத்தான் அன்று 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் வாக்களித்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தம்மை அரசாங்கத்தின் பக்கம் செல்லுமாறு கூறிவிட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னை குற்றப்படுத்திக் கூறுவது – எந்தவகையில் நியாயம் எனவும் ஹாபிஸ் நசீர் கேள்வியெழுப்பினார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் மட்டுமே அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்கிற ‘எழுதப்படாத ஒரு விதி’ இருந்து வந்தது. இந்த விதியை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகப் பதவி வகித்த பசீர் சேகுதாவூத் மீறி, மஹிந்த ராஜபக்ஷ கடைசியாக ஜனாதிபதியாக இருந்தபோது, ஹக்கீமுக்குத் தெரியாமல் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் அந்தக் கட்சியின் அப்போதைய தவிசாளருக்கும் இடையில் இருந்து வந்த முறுகல் நிலை, பெரும் போராக மாறுவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் பின்னர் பசீர் சேகுதாவூத் கட்சியிலிருந்தே விலகிச் செல்ல நேரிட்டது.

இப்போது முஸ்லிம் காங்கிரஸின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஹாபிஸ் நசீர் அஹமட், தனது கட்சித் தலைவருடைய ‘எழுதப்படாத விதி’யை மீறி, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.

இனி, முஸ்லிம் காங்கிரஸுக்குள் அவரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை, எதிர்வரும் 22ஆம் தேதி கட்சியின் உயர்பீடம் எடுக்கும் தீர்மானத்தின் பின்னர்தான் அறிய முடியும்.

 373 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular

Free Service for emergency