மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில்  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (20) மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

கண்டி மற்றும் கடவத்தை பகுதியில் இந்த இரு சோக சம்பவங்களும் பதிவானதாக அவ்வந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸார் உறுதி செய்தனர்.

கண்டி – யட்டி நுவர கச்சேரிக்கு அருகிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து நேற்று  ( 19) மாலை உயிரிழந்துள்ளார்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர், மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதர்காக நேற்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மனி வரை வரிசையில் காத்திருந்துள்ளார்.  இவ்வாறான நிலையிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்ததுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக கண்டி  தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை இன்று ( 20) முற்பகல் வேலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 70 வயதான முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கம்பஹா  மாவட்டம் கடவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பதிவானது.

மாகொல பகுதியைச் சேர்ந்த,தொழில் ரீதியாக முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்த நபராவார்.

குறித்த நபர் மண்ணெண்ணெய் பெற்றுக்கொல்வதற்காக வரிசையில் இருந்த போது மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக அவரை   கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையான ராகம வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக  பொலிஸார் கூறினர்.

இவ்வறான நிலையில், அத்தியவசிய பொருட்கள், சமயல் எரிவாயு, எரிபொருள் பற்றாக்குறையினால் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள்  நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன . எனினும், நெருக்கடிக்கான தீர்வு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சமயல் எரிவாய் பெற்றுக்கொள்ளவென நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்தமையால், மாத்தறை, திருகோணமலை, உள்ளிட்ட பல பகுதிகளில்  அமைதியின்மைகளும் பதிவாகின.

சமயல் எரிவாயுவுக்கு மட்டுமன்றி, வாகனங்களுக்கான, ஏனைய தேவைகளுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்ளவும் தொடர்ந்தும் மக்கள் நீண்ட வரிசைகலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பால் மா உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கலுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துள்ள நிலையில்,  பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமையை இலங்கையின் பல பகுதிகளிலும் அவதானிக்க முடிகிறது.

இந் நிலையில், இந்திய கடன் சலுகையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்படும் முதலாவது டீசல் கப்பல்  இன்று ( 20) நாட்டை வந்தடைந்தது. சுமார் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அக்கப்பலில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.