உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக்கூடப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலேயே நாட்டுமக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள்.

ஆனால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதைவிடுத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அடித்து விரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமேயானால், அதற்கு அப்பால்சென்று மக்களுக்கு அரசியல் ரீதியான பலத்தையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தமது கட்சி தயாராக இருப்பதாக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார, ஹரீன் பெர்னாண்டோ, முஜிபுர் ரகுமான், ஹெக்டர் அப்புஹாமி மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளனர்.

இதுகுறித்துக் கருத்துவெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார,

‘அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இடம்பெறும் கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் பொலிஸாரைக் குவித்து, புதிதாக இணையக்கோபுரமொன்றை நிர்மாணித்து போராட்டத்திற்கு வருகைதரும் மக்களை அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆனால் அவற்றைக்கண்டு அச்சமடையவேண்டாம் என்று போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்றளவிலே ராஜபக்ஷாக்கள் அச்சமடைந்திருக்கின்றார்கள். அவர்களில் ஒருசிலர் பதுங்கியிருப்பதுடன் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு விமானத்தைத் தயார் செய்கின்றார்கள்.

மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டமே அதற்குக் காரணமாகும். ஆகவே எந்தவொரு காரணத்திற்காகவும் இந்தப் போராட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு அவசியமான அரசியல் ரீதியான பலத்தை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்’ என்றார்.

அவரைத்தொடர்ந்து கருத்துவெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது:

இன்றளவிலே நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கோட்டா கோ கமவிற்கு வருகைதருகின்றார்கள்.

அதுமாத்திரமன்றி ராஜபக்ஷ குடும்பம் பயந்து பதுங்கும் அளவிற்கு இந்தப் போராட்டம் நன்கு வலுப்பெற்றுள்ளது.

மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமேயானால், நாம் அதற்கு அப்பால்சென்று மக்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்றார்.

அதேவேளை இந்தப் போராட்டம் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி பொதுமக்களால் நடத்தப்பட்டுவரும் நிலையில், தாம் இதனை வெளியிலிருந்து அவதானித்துவருவதாகவும் ஏதேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் அதற்குரிய சட்டரீதியான உதவியை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இணையக்கோபுரமும் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டதொரு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டினார்.

அரச மற்றும் வங்கி விடுமுறை தினமான நேற்று முன்தினம் இணையக்கோபுரத்தை அமைப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எவ்வாறு அனுமதி வழங்கியது? என்று கேள்வி எழுப்பிய அவர், புதிய அமைச்சரவையொன்றை நியமிப்பதற்கான முயற்சியே இதுவென்றும் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ‘உணவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைக்கூடப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையேற்பட்டிருப்பதாலும் ராஜபக்ஷ குடும்பம் பெருமளவான நிதியைக் கொள்ளையடித்திருக்கின்றது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றிருப்பதாலுமே மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகின்றார்கள்.

ஆனால் அவர்களுக்குரிய தீர்வை வழங்குவதைவிடுத்து, அவர்களை அடித்துவிரட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமேயானால், அந்த மக்களுக்கான தைரியத்தை வழங்குவதற்கு நாம் தாயாராக இருக்கின்றோம்’ என்றார்.