வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை  – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், அக்குண்டை அங்கு கொண்டு சென்று வைத்தவர் என நம்பப்படும்  நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பிரதான விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மேலதிகமாக சிறப்பு பொலிஸ் குழுவொன்று விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.  அந்த பொலிஸ் குழுவே பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பணாமுர பகுதியில்   அன்ன தான வீடொன்றில் வைத்து, அரச உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்கும்   இந்த சிறப்புக் குழு  பிரதான சந்தேக நபரை கடந்த 15 ஆம் திகதி மாலை கைது செய்ததாக  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கம்பஹா – கடவத்தை – மங்கட வீதி  பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நபர் ஒருவர் வழங்கிய 50 ஆயிரம் ரூபா ஒப்பந்ததின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் குண்டினை எடுத்து வந்து வைத்துச் சென்றதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும்,  ஒப்பந்தை வழங்கிய நபர் யார் என்பதை கண்டறியவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்  கொழும்பு தெற்கு பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கைக்குண்டு விவகாரத்தில் பொலிஸ் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை எனவும், சம்பவ தினத்தன்று பதிவான சி.சி.ரி.வி. காட்சிகள் திட்டமிட்ட வகையில் முழுமையாக சோதனை செய்யப்படாது பிற்பகல் வேளையிலிருந்து மட்டும் சோதனை செய்யப்பட்டதாக  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றச்சாட்டு முன் வைத்திருந்தார்.

சம்பவ தினம் முற்பகல் வேளையில் பையொன்றுடன் தேவாலயத்துக்குள் நுழையும் நபர் ஒருவர் தொடர்பிலான சி.சி.ரி.வி. காட்சிகளையும் அவர் வெலியிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் விசாரணைகளின் போது சி.சி.ரி.வி. காட்சிகள் சட்ட திட்டங்களுக்கு அமைய உரிய வகையிலேயே பரிசீலனை செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன  அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், சம்பவ தினமான கடந்த 11 ஆம் திகதி மு.ப. 9.52 மணிக்கு தேவாலயத்துக்குள் நுழையும் சந்தேக நபர்,  கிரிபத்கொடை – அங்குலானைக்கிடையே பயணிக்கும் 154 ஆம் இலக்க பஸ் வண்டியில் வந்து  அரச அச்சக கூட்டுத்தாபணம் முன்பாக உள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்குவதும் அங்கிருந்து தேவாலயத்துக்கு செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு தேவாலய சொற் செரூபத்துக்கு அருகே குண்டினை வைத்துவிட்டு அங்கு ஊதுபத்திகளை பற்றவைப்பதை ஒத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதும்  தேவாலய சி.சி.ரி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.

பின்னர் தேவாலயத்தில் குண்டினை வைத்ததாக நம்பப்படும் குறித்த நபர், அங்கிருந்து வெளியேறி மெகசின் சிறைச்சால்லைக்கு முன்பாக இருந்து முச்சக்கர வண்டியொன்றில் செல்வது தெரியவந்துள்ள நிலையில், அதிலிருந்து சந்தேக நபரை தேடிய விசாரணைகள் இடம்பெர்றுள்ளன.

இந்நிலையிலேயே அரச உளவுச் சேவை அளித்த தகவலுக்கு அமைய, கொழும்பு தெற்கு வலயக் குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரைக் கைது செய்ததாக  அறிய முடிகிறது.

இந்த கைக்குண்டு விவகாரத்தில் இதுவரை 15 இற்கும் அதிகமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அனைத்து சாட்சியங்களையும் ஒன்று திரட்டி பகுப்பாய்வு செய்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்  பொலிஸார் கூறினர்.

முன்னதாக கடந்த 11 ஆம் திகதி பொரளை  – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில்  29,25,41,55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதனை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

தேவாலயத்தில் உள்ள திருச் சொரூபம் ருகே  இருந்தே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தீப்பிடித்து வெடிக்கும் வகையில் பசை நாடா, இறப்பர் வளையல்கள், தீப்பெட்டிகள் மற்றும் மணக் குச்சிகளைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் பணியாளராக கடமையாற்றிய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைக்குண்டை வைத்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

சந்தேக நபர் தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனை இதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும்  அவர் கூறிய நிலையில், அச்சிறுவர் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றினையும் வழ்னக்கியிருந்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபர்  என ஆரம்பத்தில் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட நபர் கடந்த 16 வருடங்களாக தேவாலயத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், கடந்த 9 மாதங்களாக தேவாலய வளாகத்திலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குண்டினைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தி தடயப் பொருட்களையும் பொலிசார் அவரது தங்குமிடத்திலிருந்து கண்டெடுத்ததாக  கூறபப்டுகிறது.

கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.