Monday, July 4, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYபு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயம் வெள்ளி விழா காணுகிறது

பு/எருக்கலம்பிட்டி மு.ம.வித்தியாலயம் வெள்ளி விழா காணுகிறது

வட மாகாணத்தில்  மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி எனும்  கிராமத்தில்  3 பாடசாலைகளில் பயின்றுவந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட வடபுலத்து மாணாக்கர் அனைவரினாலும் கண்ணெனப் போற்றி கருத்தனமாய் வளர்க்கப்பட்ட கல்விச்செல்வம் பறிக்கப்பட்டு இம்மாணவர் அனைவரும் தமது தாயக பூமியிலிருந்து துரத்தப்பட்டு, ‘வன் தரையில் வீழ் பளிங்குகளாய் சிதறிச் சின்னாபின்னமாக்கப்பட்டனர்’.

இந்து சமுத்திர ஆழ்கடல் பரப்புக் கூடாகவும், தரைவழியாகவும், தங்கள் குடும்பங்களுடன் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் மிகக்கூடுதலான மாணவர்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்தனர்.

ஏலவே, பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் விளங்கிய புத்தள மாவட்ட பாடசாலைகள் திடீரென அகதிகளான மாணவர்களை உள்வாங்கிக் கொள்வதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எனினும் பல பாடசாலைகளில் கல்வி கற்பதற்குறிய அனுமதி வழங்கப்பட்டன.

பல பாடசாலைகளில் சம வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் சில பாடசாலைகளில் இடவசதியின்மையால் மாலைநேர வகுப்புக்களே நடாத்தப்பட்டன. இம்மாலை நேரப்பாடசாலைகளால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பூரணமற்றதாகவும், மாணவர்களின் கல்வித்தரத்தை பூர்த்தி செய்ய முடியாததாகவும் அமைந்தன.

இத்தகைய பிற்புலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழ்ந்த சமூக, பாரம்பரிய விழுமியங்களை பேணுவதில் சவால்களை எதிர்கொண்டு திண்டாடிக்கொண்டிருந்த எருக்கலம்பிட்டி மக்களை ஒண்றினைத்து ஓரிடத்தில் குடியேற்றுவதன் மூலம் சமூக, கலாசார, பொருளாதார துறைகளில் குறிப்பாக கல்வித்துறையிலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உயர்வு காணலாம், எனும் நோக்கில் எருக்கலம்பிட்டி மாண்புறு பெருமக்களால் (EDA) ‘எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கம்’ புத்தளம் எருக்கலம்பிட்டி மீள்குடியேற்றக்கிராமம் உருவாக்கப்பட்டது. இப்புதிய கிராமத்தில் அமையப்பெற்றதே
பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயமாகும்.

மறைந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அல்ஹாஜ் நூர்தீன் மசூர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு, புனரமைப்பு, கப்பல்துறை, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் அஷ்ஷஹீத் M.H.M. அஷ்ரப் அவர்களால் தற்காலிக ஓலைக்கொட்டிலில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ந் திகதி சம்பிரதாய பூர்வமாக இம் மகா வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பாசாலையில் இயங்கிவரும் இடத்தில் நிரந்தரக் கட்டிடங்களுக்கான அடிக்கல்லும் நடப்பட்டது.

மாணவர்களினதும், பாடசாலையினதும் அலுவலக கோவைகள், உபகரணங்கள் ஒவ்வொரு நாளும் காவிச் செல்லப்பட்டன. இடநெருக்கடியை உணர்ந்து ஓலைக்கொட்டில்களுக்கு அண்மையிலுள்ள நலன் விரும்பிகள் தங்களது வீடுகளில் வகுப்புக்களை நடாத்த உதவி புரிந்தமையை நினைவு கூறுதல் பொருத்தமானது.

ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக பத்துக்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இத்தகைய சூழலில் முதன் முதலாக சந்தித்த க.பொ.த. (உயர்) தரப் பரீட்சையில் 32 மாணவர்களில் 29 மாணவர்கள் சித்தியடைந்தனர். இவர்களில் 28 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றனர். 1996 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. (சாதாரண) தரப் பரீட்சையிலும் 25 மாணவர்கள் சித்தி பெற்றனர்.

சிறந்த பரீட்சை பெறுபேறுகளுடன் மட்டுமன்றி புறக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் எமது கலைக்கூடம் மிளிர்ந்து வருகிறது. மாணவ மன்றங்கள் நடாத்தப்பட்டதுடன் தமிழ் ஆங்கில மொழித் தினப்போட்டிகளிலும், சமூகக் கல்வி, விஞ்ஞான, பொது அறிவு, விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கடந்த பத்தாண்டுகளில் எம் கல்லூரி மாணவர்கள், கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட்டங்களில் மட்டுமன்றி அகில இலங்கை ரீதியிலும் பங்கு கொண்டு முன்னணி இடங்களைப் பெற்று எமது கல்லூரியின் கீர்த்தியை தேசிய மட்டத்திற்கு உயர்த்தி உள்ளனர்.

விவசாய, சுற்றாடல், வர்த்தக கழகங்கள், முதலுதவி, வீதி ஒழுங்குச் சங்கங்கள், பாடசாலை இசைக்குழு போன்றவை உருவாக்கப்பட்டு மாணவர்ளின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன. கல்விச் சுற்றுலாக்கள், களப் பயணங்கள் என்பன தவணைக் கால பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன் விஷேட வகுப்புக்கள், இரவு நேர கற்றல்கள், பருவ கால கருத்தரங்குகள் என்பன மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுவதுடன்,
பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்டு மாணவர் தம் கல்வி மேம்பாட்டுக்கு புத்தாக்கம் அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

எமது கலாசாலையின் பரீட்சை பெறுபேறுகளும், புறக்கிருத்திய செயற்பாடுகளும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றதைத் தொடர்ந்து புத்தளப் பகுதியின்  பல்வேறு இடங்களில் இருந்தும் மாணாக்கர்கள் இக் கல்லூரியில் கல்வி கற்பதற்காக படையெடுத்தனர். இடம்பெயர்ந்த ஆசிரியர்களும், உள்ளூர் ஆசிரியர்களும் விருப்புடன் கடமையாற்ற இடமாற்றம் பெற்று வந்தனர். இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வந்த எமதூர் மக்கள் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்தின் துரித வளர்ச்சியைக் கண்டு தங்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவு படுத்தியமையினால் மாணவர் தொகை 400 இலிருந்து 1450 ற்கும் கூடுதலாக அதிகரிக்கத் தொடங்கியது.

இத்தகைய சுழலினால் பல வகுப்புக்ககள் மர நிழல்களின் கீழ் நடாத்தப்பட்டதுடன், சமாந்தர வகுப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டும் நடாத்தப்பட்டன. அதிகரித்துச் செல்லும் மாணவர் தொகைக்கேற்ப பௌதிக வளம் போதாமை பெரும் குறையாகவும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாகவும் இருந்தமை உணரப்பட்டது.

இந்நிலையினை 1997ம் ஆண்டு ஓரளவேனும் தீர்க்கும் வகையில் பாடசாலையின் அபிவிருத்திச் சபையின் அணுசரணையுடன் எமதூர் நலன் விரும்பிகள் பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கி பாம்பு நடன நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி பெற்றுக் கொண்ட நிதித் தொகையுடன் அயல் கிராம ரஸூல் நகர் மக்களின் நிதி உதவியுடன் 100 x 20 அடி கட்டிடத்திற்கான அடித்தளம் இடப்பட்டு அதில் தற்காலிக ஓலைக் கொட்டில் கட்டப்பட்டு சில வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.

2000ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் M.H.M. அஷ்ரப் அவர்களால் 125 x 25 அடி அளவான இரண்டு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டு சமாந்தர வகுப்புக்கள் பிரிக்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் தரம் 6 அதாடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பயன்படுத்தத்தக்க விஞ்ஞான ஆய்வு கூடம் அமைக்கப்பட்டது.

எமது கலாபீடத்தில் அமைந்து பெருமளவிலான பௌதீக வளங்கள் நலன் விரும்பிகளாலும், கொடை வள்ளல்களாலும், பழைய மாணவர்களாலும், வழங்கப்பட்டும், அமைக்கப்பட்டும் மாணவர் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

எமது பாடசாலை 2007.04.30 ஆம் திகதி ” நவோதயா” செயற்றிட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது.

பெளதீக வள அபிவிருத்திக்கேற்ற தேவையும் காணியும் இருந்தும் விவசாய, மனையியல், விஞ்ஞான, சமூகக் கல்வி கூடங்கள், செயற்பாட்டு அறை, காரியாலயம், நூலகம், அதிபர், ஆசிரியர் விடுதிகள், களஞசிய அறைகள், மாணவர் விடுதிகள்,  உட்பட அத்தியாவசிய தேவைகள் பலவும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. தற்போது சுமார் 1200 க்கும் அதிகமான மாணாக்கர் கல்வி பயின்று வரும் நிலையில் ஏறத்தாள 62 ஆசிரியர்களும் பணிபுரிந்தி வருகின்றனர்.

  பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கற்றல், கற்பித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆரம்ப காலப் பகுதிகளில் (EDA) எருக்கலம்பிட்டி அபிவிருத்திச் சங்கமும், தற்போது பு/எருக்கலம்பிட்டி கல்வி அபிவிருத்தி அமைப்பும், வர்த்தக தனவந்தர்களும், நலன் விரும்பிகளும், பொதுநல மன்றங்களும், கழகங்களும், பெற்றார்களும், ஆசிரியர்களும், பழைய மாணவர்களும், மாணவர்களும் முன்னின்று உழைத்து வருகின்றனர்.

பௌதீக வளக் குறைபாடுகளும், ஆசிரியர் ஆளணிகளும் பூர்த்தி செய்யப்பட்டு அனைவரினதும் கவனம் எமது மாணவரின் கல்வியின் பால், பூரணமாக திசை திருப்பப்பட்டு மங்கிப் போன எமது மாண்பும், எமது கலாசாலையின் புகழும் இறைவன் அருளோடு வானுயர எழுந்து கொண்டிருக்கின்றது  என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

 157 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular