அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் அத்தியாவசிய விடயங்களை மீண்டும் செயற்படுத்துவது காலத்தின் தேவையாகும். ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும்.

அரசியமைப்பு திருத்தத்திற்கு எதிர்தரப்பினரதும், நாட்டு மக்களினதும் முழுமையான ஆதரவு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்கிழமை விசேட உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு உரையாற்றினார்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் நன்கு  அறிவார்கள். வரலாற்று காலம் தொடக்கம் பாதிப்பிற்குட்பட்டிருந்த பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.

நாட்டு மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் நோக்கம் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு கிடையாது. நாட்டு மக்கள் தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் நாடு என்ற ரீதியில் ஒன்றுப்பட வேண்டும்.அரசியல் நோக்கத்திற்காக களங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் தருணம் இதுவல்ல.நாட்டு மக்கள் அனைத்தையும் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டை யார் உண்மையாக நேசிக்கிறார்கள் என்பது குறித்தும் அவதானம் செலுத்துகிறார்கள்.அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் பொறுப்பில் இருந்து விலக முடியாது.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறுகிய பொருளாதார முகாமைத்துவத்திற்காக அரசாங்கம் பல கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.பொருளாதார முகாமைத்துவ ஆலோசனைக்காக சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி நிறுவனங்களுடன் ,நட்பு நாடுகளுடன் பொருளாதார மீட்சிக்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளன.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காண்பதுடன்,எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு நீண்டகால திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைகள் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படும் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயாராகவே உள்ளேன்.

எரிபொருள் மற்றும் எரிவாயு சேவை விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் தீர்வு காண முடியாவிடினும் வெகுவிரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் மற்றும் அரசியல் ஸ்தீரத்தன்மை உறுதியாக பேணப்பட வேண்டும்.

அரசியமைப்பு திருத்தம் அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அத்தியாவசிய விடயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாக காணப்படுகிறது. ஜனநாயக ரீதியில்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமானது.

ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் விரிவுப்படுத்தப்பட்ட வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் அதற்கு எதிர்க்கட்சியினரதும், நாட்டு மக்களினதும் ஆதரவு  முழுமையாக கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.