பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதான வாயிலுக்கு முன்பாக இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரால் அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை கேத்துமதீ பெண்கள் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் கடந்த வியாழக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் சரியாக வெளியேறாமை மற்றும் சாரதியின் சாமர்த்தியம் காரணமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் கூறினர்.
இரு கைத்துப்பாக்கிகளைக் கொண்டு இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
குறித்த அம்பியூலன்ஸ் வண்டியானது பாணந்துறை கேத்துமதீ பெண்கள் வைத்தியசாலையிலிருந்து பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளது. இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களில் நால்வர், அந்த அம்பியூலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர். அவர்கள், பாணந்துறை ஆதார வைத்தியசாலை பிரதான வாயிலுக்கு அருகில் வைத்து அம்பியூலன்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இரு துப்பாக்கிதாரிகள் இதன்போது செயற்பட்டுள்ளதுடன் ஒருவர், மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி ஆசனக் கதவை அண்மித்து துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுத்துள்ளதுடன் மற்றைய நபர், துப்பாக்கிதாரியை பாதுகாக்கும் முகமாக மற்றொரு கைத்துப்பாக்கியுடன் வைத்தியசாலை வாயிலில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் அப்பகுதியிலிருந்த மக்கள் அச்சமடைந்து நாலா பக்கமும் சிதறி ஓடியுள்ள நிலையில், துப்பாக்கிதாரிகள், மொறட்டுவை பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் தப்பியோடியிருந்தனர்.
அம்பியூலன்ஸ் சாரதியை இலக்கு வைத்த இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, இரு தோட்டாக்கள் துப்பாக்கியிலிருந்து வெளியேறியுள்ளபோதும், அதன் பின்னர் துப்பாக்கி செயலிழந்துள்ளமையால், சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
194 total views, 2 views today