பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொஹமட் ரிஸ்வான் கடுமையான மார்பு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு இரவுகளைக் கழித்துள்ளார்.

அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்ட பின்னர், போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் அணியின் மருத்துவர் நஜீப் சோம்ரூ இந்த விவரங்களை தெரிவித்தார்.

எனினும் அவர் டுபாயில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2021 டி-20 உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியில் விளையாடி, இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்காக அதிகபடியான ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் மொத்தமாக 52 பந்துகளை எதிர்கொண்ட விக்கெட் காப்பாளரான ரிஸ்வான் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றார்.

நவம்பர் 9 அன்று மொஹட் ரிஸ்வானுக்கு கடுமையான மார்பு தொற்று ஏற்பட்டது, அதன் பிறகு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் இரண்டு இரவுகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழித்ததன் பின்னர் குணமடைந்தார்.

ரிஸ்வான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தது என்பன அணி நிர்வாகத்தால் இரகசியமாக வைக்கப்பட்டதாகவும் அணி மருத்துவர் கூறினார்.