இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெடடில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியுடன் துபாயில் இன்று நடைபெறவுள்ள 2 ஆவது அரை இறுதிப் போட்டியை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளவுள்ளது.

1992 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை ஈட்டிய நியூஸிலாந்தை கடைசி குழுநிலைப் போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு பாகிஸ்தான் உலக சம்பியனாகியிருந்தது.

அதேபோன்று இம்முறை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி அலையை முடிவுக்குக் கொண்டுவந்து அதிசயம் ஒன்றை அவுஸ்திரேலியா நிகழ்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால். பலம்வாய்ந்த பாகிஸ்தானும் இந்தப் போட்டியை இலகுவில் நழுவ விடப்போவதில்லை.

குழு 1க்கான சுப்பர் 12 சுற்றில் 4 வெற்றிகளை ஈட்டிய அவுஸ்திரேலியா, நிகர ஓட்ட வேக அடிப்படையில் தென் ஆபிரிக்காவைப் பின்தள்ளி 9 வருடங்களின் பின்னர் அரை இறுதியில் விளையாடும் தகுதியை பெற்றுக்கொண்டது.

குழு 2 இல் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக அரை இறுதியில் விளையாட பாகிஸ்தான் தகுதிபெற்றது.

சுப்பர் 12 சுற்றில் தனது பரம வைரியான இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி இருவகை உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை முதல் தடவையாக வெற்றகொண்டமை விசேட அம்சமாகும்.

50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 3 தடவைகள் உட்பட 5 சம்பியன் பட்டங்களை சூடியுள்ள அவுஸ்திரேலியா இதுவரை இருபது 20 உலகக் கிண்ணத்தை வென்றதில்லை.

இங்கிலாந்தில் 2009 இல் நடைபெற்ற 2 ஆவது இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு பாகிஸ்தான் உலக சம்பயின் பட்டத்தை சூடியிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவுஸ்திரேலியாவின் வெற்றிகளில் டேவிட் வோர்னர் (187 ஓட்டங்கள்), ஆரொன் பின்ச் (130 ஓட்டங்கள்), அடம் ஸம்ப்பா (11 விக்கெட்கள்) ஆகிய மூவர் பிரதான பங்காற்றியுள்ளதுடன் ஷொயெப் மாலிக், மொஹம்மத் ஹபீஸ், பக்கார் ஸமான், ஷஹீன் ஷா அப்றிடி, ஷதாப் கான் போன்ற சிறந்த வீரர்களும் அணியில் இடம்பெறுகின்றனர்.

அதேபோன்று பாபர் அஸாம் (264 ஓட்டங்கள்), மொஹம்மத் ரிஸ்வான் (214 ஓட்டங்கள்), ஹரிஸ் ரவூப் (8 விக்கெட்கள்) ஆகியோர் பாகிஸ்தானின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அதேவேளை, க்ளென் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்செல் மார்ஷ், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட் ஆகிய வீரர்களும் ஆற்றல்களை வெளிப்படுத்தக்கூடியவர்களே.

இந்த இரண்டு அணிகளுக்கும் அவுஸ்திரேலியர்கள் இருவர் பயிற்றுநர்களாக இருப்பது மற்றொரு விசேட அம்சமாகும்.

அவுஸ்திரேலிய அணியில் அதிசிறந்த ஆரம்ப ஜோடியாக 2001 முதல் 2007வரை விளையாடிய மெத்யூ ஹேடனும் ஜஸ்டின் லெங்கரும் இன்று எதிரும் புதிருமாக இரண்டு அணிகளை வழிநடத்தவுள்ளனர்.

பாகிஸ்தான் அணிக்கு மெத்யூ ஹேடன் துடுப்பாட்ட ஆலோசகராகவும் அவஸ்திரேலிய அணிக்கு ஜஸ்டின் லெங்கர் தலைமைப் பயிற்றுநராகவும் செயற்படுகின்றனர்.

பாகிஸ்தானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இன்றைய போட்டி, கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப் போட்டியில் வெற்றிபெறும் அணி துபாயில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்தாடும்.

அணிகள்

பாகிஸ்தான்: மொஹம்மத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), பக்கார் ஸமான், மொஹம்மத் ஹவீஸ், ஷொயெப் மாலிக், அசிப் அலி, ஷதாப் கான், இமாத் வசிம், ஹசன் அலி, ஹரிஸ் ரவூப், ஷஹீன் ஷா அப்றிடி.

அவுஸ்திரேலியா: டேவிட் வோர்னர், ஆரொன் பின்ச் (தலைவர்), மிச்செல் மார்ஷ், க்லென் மெக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வேட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், அடம் ஸம்ப்பா, ஜொஷ் ஹேஸ்ல்வூட்.

அணிகள் கடந்து வந்த பாதை

பாகிஸ்தான்
எதிர் இந்தியா 10 விக்கெட்களால் வெற்றி
எதிர் நியூஸிலாந்து 5 விக்கெட்களால் வெற்றி
எதிர் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்களால் வெற்றி
எதிர் நமிபியா 48 ஓட்டங்களால் வெற்றி
எதிர் ஸ்கொட்லாந்து 72 ஓட்டங்களால் வெற்றி

அவுஸ்திரேலியா
எதிர் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றி
எதிர் இலங்கை 7 விக்கெட்களால் வெற்றி
எதிர் இங்கிலாந்து 8 விக்கெட்களால் தோல்வி
எதிர் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றி
எதிர் மே. தீவுகள் 8 விக்கெட்களால் வெற்றி