நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது முழுயைாக தோல்வியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹா்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இந்த செலவுத் திட்டத்தில் வருமானத்தை அதிகமாக காட்டி செலவீனத்தை குறைத்து காட்டும் செயற்பாடே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பாதீட்டில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் எதுவுமே வருமானத்தை கொண்டு வரப் போவதில்லை.
2019இல் அரச தலைவர் பதவிக்கு வந்த நேரத்தைக் காட்டிலும் இன்று 70 வீதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
சம்பா ஒரு கிலோகிராம் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் 2019இல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது 97 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
செத்தல் மிளகாய் அன்று 400 ரூபா என்றும் இன்று 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு இன்று 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் காரணமாக எதிர்காலத்தில் பொருட்களின் விலை உயரும். அதனை தடுக்க முடியாது.
இதேவேளை இலங்கையை, இன்று சில நாடுகள் பணயக்கைதியாக வைத்திருக்கின்றன. இந்தநிலையில் சேதனப் பசளைகள் தொடர்பாக அரசாங்கம் கூறிய போதும் அதற்காக செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
உலகிலேயே கொரோனாவினால் வருமானத்தை பெற்ற நாடு இலங்கை மாத்திரமே. பிசிஆர் முறைகேடு, தடுப்பூசி முறைகேடு என எல்லாவற்றிலும் முறைகேட்டை மேற்கொண்ட அரசாங்கமாக இந்த அரசாங்கம் கருதப்படுகிறது.
இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டுக்காக 250 பில்லியன் ரூபாய்களை மாத்திரமே அரசாங்கம் இதுவரை செலவழித்துள்ளது. எனினும் அரசாங்கம் 700 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக கூறிவருகிறது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டின் பாதீட்டின்படி அரசாங்கம், 3 இலட்சத்து 25ஆயிரத்து 400 கோடியை கடனாகப் பெறவுள்ளது என தனது உரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
145 total views, 1 views today