அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கை 22 மில்லியன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடவுளே மக்கள் எவ்வாறு வாழ்வது வாழ்க்கை செலவுகள் கட்டுப்பாடு இல்லாமல் உயர்வடைகிறது. பொருளாதார பாதிப்பு குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.  கோ ஹோம் கோத்தா என்ற எதிர்ப்பிற்கு பாராளுமன்றத்தின் ஊடாக உயிர்க்கொடுக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றில் நேற்று (19) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

சிறிலங்கன்  விமான சேவைகள் நிறுவனம் 21 விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானிக்கவில்லை என பொறுப்பான அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் குறித்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார் 21 விமானங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் விமானம் கொள்வனவு செய்யும் தருணம் இதுவல்ல என்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள  வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்ப்பட்டுள்ளது. இலங்கையின் ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டி கடன் வழங்க முடியாது என  சர்வதேச  நாணய நிதியம் முதற்கட்டமாக குறிப்பிட்டுள்ள வேளையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டு இலங்கைக்கு உதவி செய்யுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் குறித்து  அதிக கனவம் செலுத்தப்பட்டுள்ளது.

நிலையியல் கட்டளையின் 148ஆவது அத்தியாயததின் 121ஆவது பிரிவில் அரச நிதி தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சியின் உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழுவிற்கு  எனது பெயர் பரிந்துரைக்கபட்ட போதும் ஆளும் தரப்பின் உறுப்பினருக்கு அப்பதவி வழங்கப்பட்டது.பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அப்பாற்பட்டு சபாநாயகர்  செயற்பட்டது ஏன். அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரம் பறித்துக்கொண்டுள்ளது.

எரிபொருள் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உட்பட அரசாங்கத்தின் தவறான நிதி முகாமைத்துவத்தினால் தற்போது  டொலரின் பெறுமதி வங்கியில் 349 ரூபாவாகவும். கறுப்புச்சந்தையில் 410  ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளத.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால்  22 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடவுளே மக்கள் எவ்வாறு வாழ்வது. இது சாதாரண தவறல்ல தண்டனைக்குரிய குற்றமாகும். எமது தரப்பில் தவறு இழைக்கப்பட்டுள்ளது  என  ஜனாதிபதி சாதாரணமாக குறிப்பிடுவதால் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

கோ ஹோம் கோத்தா என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்படும் மக்களுக்கு அனைத்தும் வேண்டாம் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஒரு தனிநபர் அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி முழு நாட்டையும் சீரழித்துள்ளமை அவர்கள்  கடுமையாக எதிர்க்கிறார்கள். ஜனாதிபதி பதவி விலகபோவதில்லை. நாட்டு மக்களின் தற்போதைய நிலைப்பாட்டை நிறைவேற்ற பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியமானது என்றார்.