ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமாக இருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு வழங்கிய இராஜாங்க அமைச்சுப் பதவியை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமான இயங்க தீர்மானித்த 11 கட்சிகள் சார்பில் கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டர்.
இதன்போது விமல் வீரவன்ச தெரிவித்ததாவது, ‘ எங்களுக்கு பிரதமர் தொடர்பில் தனிப்பட்ட கோபங்கள் இல்லை. அவர் தோற்ற போதும் அவருடன் இருந்தவர்கள் நாங்களே என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அவரது சகோதரர் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்க்ஷவுடன் தனிப்பட்ட குரோதங்கள் இல்லை. எனினும் நாடும், பொதுமக்களும் முன்வைக்கும் விடயங்களை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தற்போது நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த நிலைமை ஏற்பட முன்னரேயே பொருளாதாரத்தை காக்க நாம் முன் வந்தபோதும் முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அதனை கணக்கில் கொள்ளவில்லை. முன்னாள் நிதி அமைச்சர் பெசில் உள்ளிட்ட குழுவினர் தற்போது சுயாதீனமாக செயற்படும் தமது குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை பலியெடுக்கும் படலத்தை தொடங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை இரத்துச் செய்யும் வரையில் ஜனாதிபதியுடன் நாம் பேச்சுக்களை நடத்த நாம் தயாரில்லை.’ என அவர் தெரிவித்தார்.
199 total views, 1 views today