நேற்று பிற்பகல் இரத்து செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம், இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இந்த கூட்டம் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் அரசாங்கம் தனது ஆதரவை வழங்குவதற்கு எடுத்த தீர்மானம் குறித்து விரிவாக ஆராயப்படவிருந்தது.
அத்துடன், புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதா அல்லது அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இம்முறை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினரை தம்முடன் கலந்துரையாடலுக்காக அழைத்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை இரத்து செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, துஷ்மந்த மித்திரபால மற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுயாதீன கட்சியினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தன தேரர் மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
182 total views, 1 views today