அரச புலனாய்வு பிரிவின் அறிக்கையின் பிரகாரமே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சரவை அமைச்சு கிடைக்கப் பெறாத காரணத்திற்காக அவர் அரசாங்கத்திற்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்துள்ளமை முழுமையாக அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பிறிதொரு கூட்டணி உருவாக்கத்திற்கான ஆயத்தங்களை முன்னெடுத்தமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற  உறுப்பினர் திஸ்ஸ குட்டியராட்சி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து பாரிய சவால்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் பொது மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் கடந்த இரண்டு வருடகாலமாக முழுமையான கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டு மக்கள் சமையல் எரிவாயு, பால்மா, மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்தரப்பினர் தேர்தல் பிரசாரம் செய்துக் கொள்கிறார்கள்.

கொவிட் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விதம் குறித்து எதிர்தரப்பினர் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதில்லை. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிலும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நெருக்கடி நிலை கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ளது.

நாட்டு மக்கள் வரிசையில் நிற்பதற்கான பாதுகாப்பான சூழலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தற்காலிக பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் சென்று அரசாங்கத்தை விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்கான பாதுகாப்பான சூழலை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் மாத்தளை பகுதியில் ஆற்றிய உரை முற்றிலும் தவறானது.

அரச புலனாய்வு பிரிவினர் தேசிய பாதுகாப்பு, அரசியல் நிலைமை உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் ஜனாதிபதிக்கு அறிக்கை ஊடாக அறிவிப்பார்கள்.

அரச புலனாய்வு பிரிவினரது அறிக்கையின் பிரகாரமே சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது செயற்பாடுகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டுள்ளன. மாற்று அரசியல் கூட்டணியை உருவாக்க தயார் நிலையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு அப்பம் சாப்பிட்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று தற்போது புதியமாற்று சக்தியை உருவாக்க அரசாங்கத்தை விமர்சிக்கிறார்.

புதிய அரசியல் கூட்டணிக்கு சுதந்திர கட்சியை தலைமைத்துவமாக்க அரசாங்கத்தின் கொள்கை திட்டங்கள் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்படுகிறது.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் வீழ்ச்சிக்கு பொறுப்பு கூற வேண்டும். சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்ததன் காரணமாகவே அக்கட்சிக்கு மக்கள் குறுகிய ஆதரவினையாவது வழங்கினார்கள்.

அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகளுடன் சுதந்திர கட்சியினர் ஒன்றிணைகிறார்கள். பாதகமான செயற்பாடுகள் அல்லது பெறுபேறுகளை ஜனாதிபதி மீது முழுமையாக பொறுப்பாக்குகிறார்கள் என்றார்.