அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்புகள் போன்ற நெருக்கடிகளினால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்புகள் இன்று நாட்டை ஆபத்தான நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது.

இதன் விளைவாக அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு பொது நிகழ்வுகளில் பங்குப்பற்றுவது என்பது சவால் மிக்கதாகியுள்ளதுடன் ராஜபக்ஷ குடும்பத்தினரை இலக்கு வைத்த எதிர்ப்பு நடவடிக்கைகளும் தீவிரம் கண்டு வருகின்றன.

ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்ஷ ஆட்சி குறுகிய காலத்திற்குள் இவ்வாறானதொரு பாரிய மக்கள் எதிர்ப்பை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என தெரிவித்த ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர், சுமார் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகல் முன்னறிவித்தலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் சுதந்திர கட்சி ஒரு வார கால அவகாசத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. மேலும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விதுர விக்கிரமநாயக போன்றவர்கள் நீண்ட மௌனத்தில் உள்ளனர்.

ஆளும் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளின் பிரதிப்பலிப்பாகவே இவை காணப்படுகின்றன.

மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதில் அரசாங்கத்தின் தோல்வியே அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற பிரதான காரணமாகியது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு நிலையங்களில் இருந்த மக்கள் இலத்திரனியல் ஊடகங்ளில் கடுமையாக அரசாங்கத்தை விமர்சித்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் பலர் தவறாகவே அணுகியிருந்தனர். உதாரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் ஆவேசத்துடன் இலத்திரனியல் ஊடகங்களில் கருத்து வெளியிடுகையில் துறைசார் அமைச்சர் காமினி லொக்குகே, எவ்வித தட்டுபாடுகளும் இல்லை என்றும் எரிபொருள் விநியோகத்திற்கு செல்லும் பௌசர்கள் எரிபொருள நிரப்பு நிலையங்களில் களஞ்சியப்படுத்த இடமின்றி திரும்பி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இது போதாது என்று தட்டுப்பாடு ஏற்பட்டால் தனது தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நடைமுறையில் இன்றளவில்  அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதாக தெரிய வில்லை. மாறாக தட்டுப்பாடுகளினால் விரக்தியடைந்த மக்கள் வெளிப்படையாக ஜனாதிபதியையும் ஏனைய அரசின் உயர் மட்டத்தினரையும் விமர்சிப்பதை காணக்ககூடியதாக உள்ளது.

இந்த விமர்சனங்கள் தற்போது பெரும் போராட்டங்களாகவே உருவெடுத்து உள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு கோரும் அளவிற்கு நிலைமை மோசடைந்து விட்டது.

இவ்வாறானதொரு நிலையில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் அவசரகால பிரகடணம் உட்பட மக்கள் எதிர்ப்புகளை சுட்டடிக்காட்டி எதிர்க்கட்சியினரும் எதிரப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் சுதந்திர கட்சி உட்பட ஏனைய பங்காளி கட்சிகளின் பெரும்பாலானவை அரசாங்கத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்தவார பாராளுமன்ற அமர்வுகள் அரசாங்கத்திற்கு சவாலானதாக அமையும் என்பதுடன் மே மாதத்தில் பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என எதிர்வுக்கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.