பிரதி சபாநாயகர் தெரிவின் ஊடாக பல்வேறு தரப்பினரின் அரசியல் நாடகங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவி்க்கையில்,

இன்றைய தினம் ஒரு விடயம் தெளிவாகியுள்ளது. இந்த சபையில் வாக்களிப்பு செயற்பாட்டில் பல்வேறு தரப்பினரின் பல்வேறு தந்திரங்கள் முழு நாட்டுக்கும் பகிரங்கமாகியுள்ளது. ஒவ்வொரு விதமான நடித்து நாட்டையே ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளும் வெளியாகியுள்ளது.

ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவளிக்கவே நாங்கள் இருந்தோம். ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு சியம்பலாப்பிட்டியவுக்கு வழங்குவது தொடர்பான தகவல் வெளியான உடனே நாங்கள் எமது உறுப்பினர் ஒருவரை பிரேரிக்க தீர்மானித்தோம். சியம்பலாப்பிட்டிய இந்த அரசாங்கத்தை பாதுகாப்பவராக மாறியுள்ளார் என்பதனை கவலையுடன் கூறிக்கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் கைபொம்மையாகவும் மாறியுள்ளார்.

இங்கே நடக்கும் நாடகங்கள் வெளியே உள்ள மக்களுக்கு தெரியவந்துள்ளது. இங்கே எல்லாம் அரசியல் விளையாட்டே நடக்கின்றது. ஆனால் எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் எதிர்ப்பு என்பதனை தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம் என்றார்.