காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலக பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவைப் போன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் மைனா கோ கம உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ‘மைனா கோ கம’ எனும் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை  போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து செல்ல உத்தரவிடுமாறு  கொள்ளுப்பிட்டி பொலிஸார்  முன் வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்தது.

இந்நிலையில், கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ‘மைனா கோ கம’ எனும் பெயரில் இரவிரவாக போராட்டம் இடம்பெற்று வந்தது.

இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்களை நடைபாதையில்  ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.

இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமக்கு இடையூறு எற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கச் சென்றபோதும் அவர்களின் முறைப்பாடை ஏற்க உரிய அதிகாரி இல்லையென பொலிஸார் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பொது மக்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் தன்னெழுச்சி போராட்டம் இன்று செவ்வாய்கிழமை 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.