நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய கொள்கை அமைக்கப்படவேண்டும். அதற்காக அனைத்து கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பினர் இணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க எதிர்வரும் 25 ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

அதற்காக கட்சி பேதங்களை மறந்து அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்  என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் தாெடர்ந்து தெரிவிக்கையில்,

எந்த கட்சி அரசாங்கத்துக்கு வந்தாலும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைக்கு முகம்கொடுக்கவேண்டி வரும். அதனால் அனைத்து துறைகளுக்கும் தேசிய கொள்கை ஒன்றை அமைக்கவேண்டும். அதன் மூலமே மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும்.

அதனால் இதன்பால் அரசாங்கத்துக்கு அழுத்தம்கொடுக்கவேண்டும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது.   எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

அத்துடன் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி வழிநடத்தினாலும் எமது கட்சியின் சின்னமோ நிறமோ வெளிப்படுத்தப்படமாட்டாது. அதனால் நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக இருந்தால் அனைத்து துறைகளுக்கும் தேசிய கொள்கை அமைக்கப்படவேண்டும். யார் ஆட்சி செய்தாலும் இந்த தேசிய கொள்கைக்கு கீழே செயற்படவேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

அவ்வாறு இல்லாமல் தற்போதுள்ள நிலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. அதற்காக இந்த அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும் என்பது எமது கருத்தல்ல.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக இருந்தால் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு தேசிய கொள்கை உருவாக்கவேண்டும். அந்த கொள்கை அடிப்படையிலேயே ஆட்சிக்கு வருபவர்கள் அரசாங்கத்தை கொண்டுசெல்லவேண்டும் என்ற கொள்கை அமைக்காதவரை எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாகும்.

அதனால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக அரசியல் கட்சிகள் சிவில் அமைப்பினர் என அனைவரும் ஒருமேடையில் இருந்து பேசவேண்டும். கட்சி சின்னங்களை காட்சிப்படுத்திக்கொண்டு அதனை செய்ய முடியாது.

அதனால்தான்  கட்சி நிறம் பேதங்கள் இல்லாமல் அனைவரும்கலந்துகொண்டு தேசிய கொள்கை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம்கொடுக்க  பொது இடமொன்றுக்கு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் சத்தியாக்கிரபோராட்டத்துக்கு வருபவர்கள் வெள்ளை நிற ஆடையில் வருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.