நாடளாவிய ரீதியில் ஏற்படக் கூடிய மின் துண்டிப்பிற்கு கவலை வெளியிடுவதாகக் குறிப்பிட்டுள்ள அரசாங்கம், நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கி இயந்திர கோளாரே இந்த நெருக்கடிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

எனவே எதிர்வரும் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்கு குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் நாடளாவிய ரீதியில் வெவ்வேறு நேர அடிப்படையில் மின் துண்டிக்கப்படும் என்று இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதா என நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த நெருக்கடிக்கு தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார். மின் துண்டிப்பு குறித்த வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சாரசபை முன்வைத்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தில் காணப்படும் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் கோளாரு ஏற்பட்டுள்ளது. அதனை திருத்துவதற்கு 10 – 11 நாட்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த இயந்திர கோளாறு திருத்தப்பட்டதன் பின்னர் மின்துண்டிப்பு நெருக்கடி ஏற்படாது. அதற்கமைய இம்மாதம் 20 ஆம் திகதி வரை இந்த நெருக்கடி தொடரும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான உராய்வு நீக்கி எண்ணெய் நாட்டில் காணப்படுகிறது. அது முறைப்படி விநியோகிக்கப்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் 5 நாட்களுக்குள் இதனை முகாமைத்துவம் செய்வதற்கான வாய்ப்பு கிட்டும். எவ்வாறிருப்பினும் காணப்படும் சில நெருக்கடிகளின் காரணமாக எதிர்வரும் 10 நாட்களுக்கு குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படலாம்.

எனவே தான் இலங்கை மின்சாரசபையினால் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தால் எதிர்வரும் 10 நாட்களுக்குள் இந்த நிலைமையிலிருந்து மீள முடியும் என்று நம்புகின்றோம். இதனால் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.