அவசர நிலைமைகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து திறனற்ற பொலிஸ் அதிகாரிகள் பலர், பொறுப்பதிகாரிகளாகவும், வலயத்துக்கு பொறுப்பானவர்களாகவும் அரசியல்வாதிகளின் சிபாரிசுக்கு அமைய நியமிக்கப்பட்டதன் விளைவு, அரசியல்வாதிகளின் வீடுகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தியபோது அதனை அவர்களால் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போயுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 14 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின்  கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதில் 69 எம்.பி.க்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், தமது வீடுகள் , உடைமைகள் தாக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது அவர்கள் பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி  ஆகியோரை பதவி விலகுமாறும், வன்முறைகளை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி இந்த கூட்டத்துக்கு அழைத்திருந்த நிலையில், பொலிஸ் மா அதிபரின் முகத்துக்கு நேரே பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகக் கேவலமாக ஏசி இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் பேசிய பின்னர் அவற்றுக்கு பொலிஸ் மா அதிபர் பதிலளித்ததாக அறிய முடிகிறது. அந்த பதிலின் பின்னர், அங்கிருந்த அனைவரும் அமைதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

‘கடந்த காலங்களில், தங்களின் வசிப்பிடம் சார்ந்த பொலிஸ் பிரிவுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரிகள்  அரசியல்வாதிகளின் சிபாரிசினில் நியமிக்கப்பட்டனர்.

சில வலயங்களின் சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சர்கள் கூட அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய நியமிக்கப்பட்டனர். இதனை நான் அப்போதே எதிர்த்திருந்தேன்.

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பலர், அவசர நிலைமையின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற திறனனற்றவர்கள் என நான் அப்போதே எழுத்து மூலம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்தேன்.

மே 9ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள்; இதுவரை 230 பேர் கைது..! - The Latest News

அவ்வாறு அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட பொறுப்பதிகாரிகள் பலரின் பிரிவுகளிலேயே பெரும்பாலான வன்முறைகள் பதிவாகியுள்ளன.’ என சுட்டிக்காட்டி ரமேஷ் பத்திரணவிடம் உங்கள் தொகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சரை நியமிக்க நீங்கள் என்னுடன் முரண்படவில்லையா எனவும்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்தே அங்கிருந்த ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைதியடைந்துள்ளனர்.