உக்ரேன்- ரஷ்யா போா் ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையில், மரியுபோலுள்ள திரையரங்கில் ஏராளமானோர் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக உக்ரேன் அரசு அறிவித்துள்ளது.

மரியுபோலிலுள்ள திரையரங்கு ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், மார்ச் 16ஆம் திகதி ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், திரையரங்கு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியிருப்பதாக உக்ரேன் அரசு டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

திரையரங்கின் இரண்டு பக்கங்களிலும் குழந்தைகள் என்று ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்த நிலையில், அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரேன் சேருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ஆம் திகதி உக்ரேன் மீது போா் தொடுத்தது. வான்வழியாகவும், கடல் மாா்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், உக்ரேனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோா் அகதிகளாக இடம்பெயர நோ்ந்தது. இதில் பெரும்பாலானோா் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இந்தப் போா் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆயினும், ரஷ்யாவின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உக்ரேன் தலைநகரான கீவ் மீது ரஷ்யா தொடா்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தாலும் அந்நகரை ரஷ்ய ராணுவத்தினரால் இன்னமும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை.