உலக சந்தையின் விலைக்கமைய சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 5ஆம் திகதி நிச்சயம் குறைக்கப்படும். உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைவடையும் போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் எரிவாயு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிவாயு தட்டுப்பாட்டை கட்டம் கட்டமாக முடிவிற்கு கொண்டு வருவோம் என நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம். கடந்த 20 நாட்களுக்குள் மாத்திரம் சந்தைக்கு சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளோம்.

சமையல் எரிவாயுவை தட்டுப்பாடின்றி விநியோகிக்க உலக வங்கி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.எதிர்வரும் நான்கு மாதத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளது.

ஆகவே பொது மக்கள் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவும்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைப்பிற்கமைய,தேசிய மட்டத்தில் எரிவாயுவின் விலையை எதிர்வரும் 5ஆம் திகதி குறைக்கப்படும்.

எரிவாயுவின் விற்பனை விலையை பெருந்தொகை அளவில் குறைக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

நிதியமைச்சு,ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எரிவாயு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளோம்.உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைவடையும் போது அதன் பயன் நுகர்வோருக்கு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.