இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் தாம் இணைய விரும்புவதாக முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளதாக தொியவந்துள்ளது.
இதுதொடர்பில் மெத்யூஸ் மற்றும் ஸ்ரீலங்கா கிாிக்கெட்டுக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் இதுவரை இடம்பெறவில்லை.
எனினும், மெத்யூஸின் விருப்பக் கடிதம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று விசேட கூட்டமொன்றில் ஆராயவுள்ளதாக கிரிக் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தமக்கு இலங்கை அணியின் எதிர்வரும் சுற்றுப்பயணத்தில் இணையும் எண்ணமில்லையென, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்திருந்தார்.
மெத்யூஸ் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடையிலான போட்டி ஒப்பந்தம் தொடர்பில் பல மாதங்களாக நெருக்கடி நிலவிய சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது, மெத்யூஸுக்கு 50, 000 அமெரிக்க டொலர் (சுமார் 9,950,000 ரூபா) வேதனக் கழிப்பனவை மேற்கொள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் பரிந்துரைத்திருந்தது.
இந்தக் காலப்பகுதியிலேயே, இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிகளிலிருந்து ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் விலகியிருந்தனர்.
மீண்டும் அணியில் இணைய சந்தர்ப்பம் கிடைத்தால், மெத்யூஸ் டெஸ்ட் அணியில் இணைந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நவம்பரில், சுற்றுலா மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடாில் இலங்கை அணிசார்பில் இணைந்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கிரிக் இன்ஃபோ மேலும் தெரிவித்துள்ளது.
59 total views, 1 views today