Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஆசியாவின் ஆச்சரியமாக மாறும் இலங்கை

ஆசியாவின் ஆச்சரியமாக மாறும் இலங்கை

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை மாறும் என கனவு கண்டவர்களால் ஆசியாவின் மற்றுமொரு சோமாலியாவாக இலங்கை மாறிக்கொண்டு வருவதாக நாட்டில் நாளாந்தம்  இடம்பெறும் சம்பவங்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

வீதிகளில் புதிது புதிதாக யாசகம் கேட்போர் பெருகி வருகின்றனர். மக்களால் வாழ்கைச் சுமையை தாங்க முடியாமையே இதன் வெளிப்பாடாக காணப்படுகின்றது.

யாசகம் கேட்போரும் வெட்கத்தில் ஒவ்வொரு காரணங்களை கூறி யாசகம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு யாசகம் கேட்போர் எதிர்காலத்தில் நிரந்தர யாசகர்களாக மாறும் நிலை உறுவாகும்.

நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக்குவோமெனக் கூறி சீனா போன்ற நாடுகளிடம் அதிக வட்டிக்கு கடன்களை வாங்கிய ஆட்சியாளர்கள் வீதிகளை அபிவிருத்தி செய்வதிலும் மேம்பாலங்களை கட்டுவதிலும் மக்களின் கவனத்தை திசை திருப்பி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தற்போதைய மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வெளிப்பாடாக காணப்படுகின்றது.

“ பொருளாதார நெருக்கடிக்கு 74 வருடகால அரசியல் காரணம் என்று ஒருதரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.74 வருடகால அரசியல் நாட்டிற்கு பல்வேறு சிறந்த சேவையாற்றியுள்ளதை எவரும் மறுக்க முடியாது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். பொருளாதார விவகாரம் தொடர்பான தீர்மானங்களின் போது முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லையென” பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிடுகின்றார்.

சிங்கப்பூரைப்போன்று இலங்கையை அபிவிருத்தி செய்வோம் எனக் கூறிக்கொண்டு ஆட்சி பீடமேறியவர்கள் வாக்களித்த நாட்டுமக்களையே அத்தியாவசியப் பொருட்களுக்காக நடுத்தெருவில் கையேந்தும் நிலைக்குத் தள்ளியுள்ளனர். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கடுமையாகக் குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் மக்கள் எதிர்ப்பு வலுவடைந்து செல்கின்றது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களை குறிவைத்து எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் பொருளாதார முறையை தவறாக கையாண்டதாக தெரிவித்தே எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ நாட்டை நிர்வகிப்பதற்கும் , அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் மேலும் ஒரு டிரில்லியன் பணம் அச்சிட வேண்டுமெனவும் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் ” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் எழுபது நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளின் வரிசையில்  இலங்கை தற்போது முதலிடத்தில் காணப்படுகின்றது.

குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளுக்கமைய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய  நாட்டின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நுற்றுக்கு 33.8வீதமாக பதிவாகி உள்ளது.

உணவுப்பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் நூற்றுக்கு 29.5 ஆக பதிவாகி இருப்பதுடன் அது ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 45.1ஆக பதிவாகி இருக்கின்றது.

அதேபோன்று உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் நூற்றுக்கு 14.5 ஆக பதிவாகி இருந்ததுடன் அது ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 23.9ஆக பதிவாகி இருக்கின்றது.

மார்ச் மாதத்துக்கு இணையாக ஏப்ரல் மாதத்தில் குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 5672.59 ரூபாவால் அதிகரித்துள்ளதென குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன.

“ நாட்டில் தற்போதுள்ள பண வீக்கத்திற்கு மத்தியில் மீண்டும் மீண்டும் பணத்தை அச்சிடுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு , தள்ளுவண்டியில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும். பாண் இறாத்தலொன்றின் விலை 400 ரூபா வரையும், பால்மா பக்கெட்டின் விலை 1000 ரூபா வரையும், பெற்றோல் லீற்றரொன்றின் விலை 600 ரூபா வரையும், சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 10 000 ரூபா வரையும் உயர்வடையக் கூடும். இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சுய தொழில் செய்வோருக்கும், தனியார் துறையினருக்கும் , சிறு தொழில்களில் ஈடுபடுவோருக்கும் , அன்றாடம் உழைத்து உண்போருக்கும் வாழ முடியாத சூழல் ஏற்படும்.

இவர்களுக்கு 3 வேளையும் உண்ண முடியாத நிலைமையும் ஏற்படும்.” என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறுகிறார்.

நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு மிகவிரைவான அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.

அதிகரித்துச்செல்லும் உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றின் விலைகள் உள்ளடங்கலாக பாரிய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் விரைந்து எடுக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போதுள்ள பேரினப்பொருளாதார நிலைமைகள், அதனால் வங்கித்தொழிற்துறைமீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு வங்கித்துறையை வலுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கைத் திட்டத்தை செயற்படுத்தி சர்வதேச நாடுகளினதும், சர்வதேச நிதி நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கையை ஆசியாவின் சோமாலியாவாக மாற்றாது ஆச்சரியமாக மாற்ற நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டியது காலத்தின் தேவை.

 113 total views,  2 views today

RELATED ARTICLES

Most Popular