Monday, September 26, 2022
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஅடிக்கு மேல் அடி.. நீர்கட்டணம் அதிகரிப்பு

அடிக்கு மேல் அடி.. நீர்கட்டணம் அதிகரிப்பு

நீர் மற்றும் கழிவு நீர் அமைப்பிற்குரிய கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அனைத்து நீர் பாவனையாளர்களும் தொகுதிகளாப் பிரிவிக்கப்பட்டு , அதற்கமைய கட்டண விதிப்பு முறைமை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ‘சமூர்த்தி பெறுநர்கள்’, ‘சமூர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பல்லாத ஏனையோர்’, ‘சமூர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்கள்’, ‘பொதுநீர் குழாய் மற்றும் பூங்கா நீர்குழாய்’, ‘பாடசாலைகள், மத வழிபாட்டுத்தளங்கள்’ , ‘அரச நிறுவனங்கள், சிறிய – நடுத்தர கைத்தொழில் அல்லாத ஏனைய தொழில்கள்’, ‘அரச வைத்தியசாலைகள்’ , ‘சிறிய – நடுத்தர கைத்தொழில்கள்’, ‘வணிக நிறுவனங்கள்’ , ‘துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து’ , ‘முதலீட்டு சபையினால் அனுமதிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு நீர் வழங்குதல்’ , ‘மொத்தமாக நீர் வழங்குதல்’ என்பன குறித்த 12 வகைப்படுத்தல்களாகும்.

அதற்கமைய சமூர்த்தி பெறுநர்களுக்கு 75 அலகுகளுக்கு மேல் ஒவ்வொரு அலகிற்கும் 140 ரூபா பாவனைக்கட்டணமும் , 1,600 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறிவிடப்படவுள்ளது. சமூர்த்தி பெறுநர்கள் மற்றும் தோட்டக்குடியிருப்பல்லாத ஏனையோருக்கு 75 அலகுகளுக்கு மேல் ஒவ்வொரு அலகிற்கும் 245 ரூபா பாவனைக்கட்டணமும் , 3,500 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறிவிடப்படவுள்ளது.

சமூர்த்தி பெறுநர்கள் அல்லாத தோட்டக் குடியிருப்பாளர்களுக்கு 75 அலகுகளுக்கு மேல் ஒவ்வொரு அலகிற்கும் 140 ரூபா பாவனைக்கட்டணமும் , 1,600 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறிவிடப்படவுள்ளது. பொதுநீர் குழாய் மற்றும் பூங்கா நீர்குழாய்களுக்கு 201 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 15 ரூபா பாவனைக் கட்டணமும் , 2,500 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகள் , மத வழிபாட்டுத்தளங்கள் மற்றும் அரச அனுமதி பெற்ற தர்ம ஸ்தானங்களில் 75 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 16 ரூபா பாவனைக் கட்டணமும் , 1,600 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

அரச நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொகுதிக்கு உட்படாத கைத்தொழில் நிறுவனங்களுக்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 86 ரூபா பாவனைக் கட்டணமும் , 110,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

அரச வைத்தியசாலைகளுக்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 69 ரூபா பாவனைக் கட்டணமும் , 100,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொகுதிக்கு உட்பட்ட கைத்தொழில்களுக்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 78 ரூபா பாவனைக் கட்டணமும் , 105,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

வணிக நோக்கத்துடன் இயங்குகின்ற நிறுவனங்கள், அரச தொழில் முயற்சி நிறுவனங்கள், சுற்றுலா விடுதிகள், தங்கும் விடுதிகள், கூட்டிணைந்த அபிவிருத்திகள், சபை வளாகங்களுக்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 116 ரூபா பாவனைக் கட்டணமும் , 115,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

துறைமுகங்களுக்கு வருகை தருகின்ற கப்பல்களுக்கு நீர் வழங்குதல் மற்றும் துறைமுக நகரம் என்பவற்றிற்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 670 ரூபா பாவனைக் கட்டணமும் , 120,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

முதலீட்டு சபையின் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்களுக்கு 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 61 ரூபா பாவனைக் கட்டணமும் , 115,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

மொத்தமாக நீர் வழங்குதலின் போது 20,000 அலகிற்கு மேல் பாவிக்கப்படும் ஒவ்வொரு மேலதிக அலகிற்கும் 30 ரூபா பாவனைக் கட்டணமும் , 110,000 ரூபா வரை சேவைக்கட்டணமும் அறவிடப்படும்.

இதேவேளை புதிய சேவை இணைப்பொன்றிணை வழங்குவதற்கான செலவானது பாவனையாளர்களிடமிருந்தே அறவிடப்படும். மேலும் ஏதாவதொரு குறிப்பிட்ட மாதத்தில் நீரை பயன்படுத்தாத பாவனையாளர்களுக்கு குறைந்த மாதாந்த சேவை சேவைக் கட்டணம் மற்றும் பெறுமதிசேர் வரி ஆகியவை அறவிடப்படும்.

நீர்ப்பட்டியல் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 14 நாட்களுக்கு நீர் கட்டணத்தை செலுத்துகின்ற பாவனையாளர்களுக்கு நீர்ப்பட்டியலின் பெறுமதியில் 1.5 சதவீதமான கழிவு வழங்கப்படும். அதே வேளை நீர்ப்பட்டியல் வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை செலுத்த தவறுபவர்களுக்கு நீர்ப்பட்டியல் வழங்கப்பட்டு நிலுவையாகவுள்ள தொகையின் நிமித்தம் மாதமொன்றுக்கு 2.5 சதவீதம் மேலதிக கட்டணம் அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 30 நாட்களுக்கு மேலாக நீர்ப்பட்டியலுக்கான கட்டண தொகையானது நிலுவையாகக் காணப்படுமிடத்து பாவனை சேவை இணைப்பை துண்டிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் பொது முகாமையாளருக்கு அதிகாரம் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 139 total views,  1 views today

RELATED ARTICLES

Most Popular